தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் - தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு


தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் - தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
x

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார்.

சென்னை,

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகள் ரூ.48.8 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. தற்போது வரை 4.5 கி.மீ. தூரம் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதம் உள்ள பணிகள் நில எடுப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். எனவே இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் இறையன்பு, சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பெருங்களத்தூர் மேம்பால பணிகளை இறையன்பு ஆய்வு செய்தார். இந்த பணிகள் ரூ.234.37 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 69 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர், குரோம்பேட்டையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



Next Story