பகுதிநேர வேலைவாய்ப்பு என 'வாட்ஸ் அப்'பில் தகவல் அனுப்பி நூதன மோசடி - தாம்பரம் மாநகர போலீசார் எச்சரிக்கை


பகுதிநேர வேலைவாய்ப்பு என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி நூதன மோசடி - தாம்பரம் மாநகர போலீசார் எச்சரிக்கை
x

பகுதி நேர வேலை வாய்ப்பு என ‘வாட்ஸ்அப்’பில் தகவல் அனுப்பி நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தாம்பரம் மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை

இது தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்களின் செல்போனில் பகுதி நேர வேலைவாய்ப்பு என 'வாட்ஸ்அப்'பில் தகவல் வரும். அதைதொடர்ந்து ஒரு 'லிங்'கை அனுப்பி வைப்பார்கள். அதை 'கிளிக்' செய்தவுடன் ஒரு டெலிகிராம் டாஸ்க் குருப்பில் இணைந்து விடுவர். அதில் யூடியூப், சினிமா, ஓட்டல் போன்றவற்றை 'லைக'் மற்றும் 'ரெவியூ' செய்தால் ரூ.50 தருவதாக கூறி அவர்கள் செய்த வேலைக்குண்டான பணத்தை உடனே வங்கியில் செலுத்தி விடுவார்கள்.

இதே வேலையை மேலும் தொடர வேண்டுமெனில் 'பிரிபெய்டு டாஸ்க்' என்ற புது டெலிகிராம் குருப்பில் இணைத்து விடுவர். அந்த குருப்பில் உள்ள அனைவரும் அவர்களுக்கு தெரிந்த நபர்கள் ஒன்றிணைந்து போலியாக லாபம் அடைந்ததாக அவர்களுக்குள் தகவல் அனுப்பி நம்ப வைப்பார்கள்.

பின்னர் அவர்கள் அனுப்பிய காயின் கலெக்டர் என்ற இணைய தளத்தில் ஒரு கணக்கை தொடங்க சொல்லி அதில் 20 டாஸ்க் கொடுத்து ஒவ்வொரு டாஸ்கிற்காக இந்த மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தை மூதலீடு செய்த பின்பு பகுதி நேர வேலைக்கான மொத்த தொகையை காயின் கலெக்டர் இணையதளத்தில் அவர்களுக்கென்று தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் தெரியப்படுத்துவார்கள்.

அந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமெனில் அனைத்து டாஸ்குகளையும் சொல்லி முதல் டாஸ்க் ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10- வது டாஸ்கிற்கு மேல் ரூ.1 கோடி ரூபாய் வரை கட்டசொல்லி விட்டு ஏமாற்றி விடுவார்கள்.

இது மாதிரியான பல புகார்கள் தினம்தோறும் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுபோன்ற டெலிகிராம் , வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை பார்க்கும் போது பொதுமக்கள் மோசடி கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story