இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் கட்டாயம் - உயர்கல்வித்துறை உத்தரவு


இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் கட்டாயம் - உயர்கல்வித்துறை உத்தரவு
x

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத் திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ம் ஆண்டு பருவத்தில் தமிழ் மொழி பாடத்திட்டம் நடத்தப்படுவதில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனை சரிசெய்யும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையிலும் உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

அந்தவகையில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களில் (அண்ணா மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் நீங்கலாக) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் சில பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுவதில்லை என்று அறியப்படுகிறது.

இந்த நிலையினை மாற்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவத் தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத் திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் 2-ம் ஆண்டு பருவத்தேர்வுகளிலும், இனி தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story