தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93% பேர் தேர்ச்சி


தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93% பேர் தேர்ச்சி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 May 2023 8:50 AM GMT (Updated: 19 May 2023 9:18 AM GMT)

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. பிளஸ்-1 பொதுத்தேர்வில் மொத்தம் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.36%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 86.99% ஆக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் பிளஸ்-1 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 84.97% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.20% தேர்ச்சி பெற்றுள்ளன.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டுள்ளன.


Next Story