தமிழக மீனவர்கள் கைது - டிடிவி தினகரன் கண்டனம்
மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குவது, கைது செய்வது, படகுகளை சிறைபிடிப்பது என இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, புதுக்கோட்டை மட்டுமல்ல அனைத்து மாவட்ட மீனவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வருங்காலங்களில் எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.