கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.
ராமேசுவரம்,
கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடுகளுடன் கரை திரும்ப வேண்டும் என்று வேண்டிய காலம் போய், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று வேண்டும் காலம் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் ராட்சத விளக்குகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மீனவர்கள் மீது தங்களது ரோந்து படகில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
இருந்தபோதிலும் சில கி.மீ. தூரம் வரை இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களை துரத்தி வந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் லேசான காயங்களுடன் கரை திரும்பினர். இதுபற்றிய தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.