தமிழ்நாடு அரசை ஆளாளுக்கு கூறு போட்டு ஆட்சி செய்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


தமிழ்நாடு அரசை ஆளாளுக்கு கூறு போட்டு ஆட்சி செய்கின்றனர்  - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி என்று ஆளாளுக்கு தமிழ்நாடு அரசை கூறு போட்டுக்கொண்டு அரசை நடத்துகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய மடலில் கூறியிருப்பதாவது,

பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 106-வது பிறந்த நாள்... அதுவே நமக்கு சிறந்த நாள், அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள் மற்றும் அதுவே நமக்கு நன்னாள்.

அன்பார்ந்த கழக உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நன்னாளில், நான் உங்களோடு பேசுவதற்கு ஒரு அரிய வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. அதுவே மடலாக உங்களுக்கு எழுதுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று"

என்ற வள்ளுவப் பேராசானின் சொல்லுக்கேற்றவாறு, மனிதனாகப் பிறந்தவன் புகழுடன் இருக்க வேண்டும். புகழ் பெற முடியாவிட்டால் பிறந்த பயனை இழப்பார்கள்.

அத்தகையர்களுக்கு ஒரு வரலாறு இல்லை. ஆனால், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்ததும் ஒரு வரலாறு. மறைந்ததும் ஒரு வரலாறு. அத்தகைய ஒரு வரலாற்றை யாரும் படைத்ததில்லை.

கலைத்துறையின் துருவ நட்சத்திரமாகக் திகழ்ந்து, புகழின் உச்சத்தில் இருந்தவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்று, மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக நல்லாட்சியை வழங்கினார்.

இப்படி அவர் தொட்டதெல்லாம் துலங்கும், கை பட்டதெல்லாம் விளங்கும் என்ற வகையில் மிகச் சிறந்த மனிதநேயமிக்க பண்பாளராக திகழ்ந்தவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அத்தகைய மன்னாதி மன்னன், ஒளி விளக்கு, எங்கள் வீட்டு பிள்ளையாம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் நம்மையெல்லாம் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர் தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

தான் உழைத்து சேகரித்த செல்வத்தை, ஏழை, எளியோர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் வழங்கிய வள்ளல் பெருந்தகை. தன்னுடைய கடைசி காலத்தில் கூட மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னுடைய சொத்தையே அவர்களுக்கு வாரி வாரி வழங்கி நிகரற்ற கொடைத் தன்மைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் தான் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

"மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்; ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்" என்கிற பாடலுக்கு ஏற்றவாறு வாழ்ந்தவர்.

வாழ்க்கை என்பது ஒரு நாளில் தொடங்கி, ஒரு நாளில் முடிவதல்ல. வாழ்க்கை என்பது நாம் பிறக்கும் முன்னரே இருந்தது. நம் மறைவதற்கு பின்னரும் அது இருக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

அத்தகைய விதத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகும், ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கார் உள்ளவரை, கடல் நீர் உள்ளவரை அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக் கனியாகத் திகழ்ந்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை இம்மியளவும் பிசகாமல், அதில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஈடு இணையற்ற தலைவர் தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

தனது திரைப்படப் பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று, அவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர்தான் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

"தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று; என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை, இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை" என்றும், பேரறிஞர் அண்ணாவின் புகழை பாடல்களின் வாயிலாக பரப்பி வாழ்ந்தவர் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் போன்றவற்றையெல்லாம் மேடைகளில் பேசினாலும், தன் திரைப்படப் பாடல்கள் வாயிலாக கொள்கை, கோட்பாடுகள் அனைத்தும் அடித்தட்டு மக்களுக்கு சென்று சேரும் வண்ணம் செய்தவர் தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

மேலும் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா" என்ற பாடல் வரிகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவிற்கு பிறகு, தடைக்கற்கள் உண்டெனினும், திடந்தோள்கள் உண்டு என்ற அண்ணாவின் கொள்கைக்கேற்ப, தீயசக்தியான மறைந்த கருணாநிதியின் பல தடைகளைக் கடந்து, அவரது ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, தான் வாழும் வரை கோட்டை பக்கமே திமுக-வையும், அவர்களது கூட்டத்தைச் சேர்ந்தவர்களையும் வர முடியாமல் செய்து, மக்கள் தலைவராக செல்வாக்குடன் திகழ்ந்தவர் தான் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர் தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம், தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம், திராவிட இயக்கம் கண்ட கனவுக்கிணங்க பெயர்களுக்குப் பிறகு இருந்த சாதிப் பெயர்கள் நீக்கம், விவசாயிகளின் துயர் துடைக்க இலவச மின்சாரம், நெசவாளிகளின் துயர் துடைக்க வேட்டி, சேலைகளை தயாரிக்கச் செய்து அதை பாமர மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியது, குடிசைகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், கிராமப்புறங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த கிராம முன்சிப் பதவிகளை ஒழித்து, நிர்வாக அமைப்பை மாற்றியமைத்ததும், பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்து அதை சிறப்புற செய்தது, 48 சதவீத இட ஒதுக்கீடு முறையை 68 சதவீத இட ஒதுக்கீட்டு முறையாக மாற்றியமைத்தது போன்ற பல சிறந்த நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்தான் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

1972-ஆம் ஆண்டில் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த தீயசக்தியான திரு. கருணாநிதி அவர்கள் இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்தார்.

பிறகு ஆட்சிக்கு வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமுல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அவருடைய காலத்தில் பாமர மக்களுக்கு இன்னல்கள் ஏற்படாத வண்ணம் வீட்டு வரி, குடிநீர் வரி, பேருந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்தாமல், மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

இன்றைய திமுக ஸ்டாலின் அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.

இன்றைய, நிர்வாக திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுக-வின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர், அவரது மகன் திரு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்று ஆளாளுக்கு தமிழக அரசை கூறு போட்டுக்கொண்டு விடியா அரசை நடத்துகின்றனர்.

எனவே, இந்த மக்கள் விரோத இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீரசபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

வெற்றி நமதே!

பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!

வெல்க புரட்சித் தலைவரின் பேரியக்கம்!! வாழ்க புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழ் !!!

இவ்வாறு அந்த மடலில் கூறப்பட்டுள்ளது.



Next Story