காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதன் காரணமாக குறுவைப் பாசனத்திற்காக காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 7,500 கன அடியாகவும், பின்னர் 6,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

காவிரியில் வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், 10,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலேயே, கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பயிர்கள் வாடின. வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் என்பது காவிரி பாசனத்திற்கு போதுமானதல்ல. விளைந்து நிற்கும் பயிர்கள் கூட கருகுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு இன்று காலை நிலவரப்படி 21.47 டி.எம்.சி.யாக குறைந்து விட்ட நிலையில், இருக்கும் நீரைக் கொண்டு கூடுதலாக தண்ணீர் திறக்கவும் வாய்ப்பில்லை. அணைக்கு வினாடிக்கு 5,100 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதைக் கொண்டு தான் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடகத்திடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெறாமல் கூடுதல் நீரை திறக்க வாய்ப்பில்லை; குறுவைப் பயிர்களைக் காப்பாற்றவும் வழியில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணையைத் தொடர்ந்து கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 10,268 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆனால், காவிரி படுகையில் நிலவும் சூழலை சமாளிக்க இந்த நீர் போதுமானதல்ல. காவிரி படுகையில் பயிர்கள் வாடும் நிலையில், 93 டி.எம்.சி. தண்ணீரை வைத்திருக்கும் கர்நாடகம் மிகக்குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை கர்நாடகம் 38 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு வழங்க வேண்டிய 45.95 டி.எம்.சி. தண்ணீரில், இம்மாதத்தில் மீதமுள்ள 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி. வீதம் 30 டி.எம்.சி. வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் வரை வழங்க வேண்டிய தண்ணீரை ஈடு செய்ய வேண்டும் என்றால் வினாடிக்கு 40,800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கே தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது நியாயமல்ல.

கர்நாடகத்திடமிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கருகச் செய்து விடும். எனவே, விடுமுறை நாளாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரியில் கூடுதல் நீரைப் பெறுவதற்கு போர்க்கால வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story