விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்


விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்
x
தினத்தந்தி 10 Oct 2023 11:09 AM GMT (Updated: 10 Oct 2023 11:38 AM GMT)

விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாட்டில் நடைபெறும் பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் பார்வையாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மது வினியோகம் செய்வதற்கு வசதியாக 1937-ம் ஆண்டின் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான சட்டத்திருத்த முன் வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகின்றன.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.பன்னாட்டு மற்றும் தேசிய மாநாடுகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கும் வெளிநாட்டவர்கள் மது அருந்தும் வழக்கம் கொண்டவர்கள் என்பதற்காக நிகழ்விடத்திலேயே நாம் கடை விரிக்கத் தேவையில்லை; அது நமது பண்பாடும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.சேவை பெறும் உரிமைச் சட்டம், லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்துவதற்கான சட்டம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் ஏராளமாக உள்ளன.

அவற்றை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, விளையாட்டுப் போட்டிகளிலும், பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசரம், அவசரமாக கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. இந்த சட்டத் திருத்தத்தை அறிமுக நிலையில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story