பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 26 Aug 2022 12:58 PM IST (Updated: 26 Aug 2022 12:58 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ரூ.261 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று வந்தார். கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஈரோடு நோக்கி வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம்.பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன. இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம்.

யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி. நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். முதல்-அமைச்சராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன்.

மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. அனைத்து மக்களும் பயனடையும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story