பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2023 4:15 AM IST (Updated: 23 Nov 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியினர் உயர்ந்த பதவிகளை பெறும் வகையில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் நேற்று தொடங்கியது. நேரு யுவகேந்திரா அமைப்பின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில இயக்குனர் குன்ஹம்மது வரவேற்றார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விழாவில் கலந்து கொண்டு இளைஞர் விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் 10 கோடிக்கும்மேல் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பழங்குடியினர் மேம்படும்போது இந்தியாவும் மேம்படும். பழங்குடியினர் உயர்ந்த பதவிகளை பெறும் வகையில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்மொழி மிக பழமையானது. இந்த விழாவில் ஜார்கண்ட், ஒடிசா, மராட்டியம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தனர். ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும் நீங்கள் இங்கிருந்து செல்லும்போது குறைந்தபட்சம் 12 தமிழ் வாக்கியங்களையாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. தமிழக கலாசாரம், உணவு வகைகளை நீங்கள் அறிந்து கொள்ள இந்த விழா ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story