தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக மேற்கு தாம்பரத்தில் 11.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகம், புதுவையில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மேற்கு தாம்பரத்தில் 11.4 செ.மீ. மழையும், காட்டுக்குப்பம், உத்தண்டியில் தலா 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அத்துடன், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழையும், கொரட்டூர், மணலி, கோடம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.