தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்க வேண்டும் - தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்


தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி வழங்க வேண்டும் - தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 30 July 2023 4:45 AM IST (Updated: 30 July 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இளைஞர் அணி கூட்டம்

தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு இளைஞர் அணி சார்பில் இந்திய தேசிய சின்னம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ்.சீனிவாசன், க.பிரபு, ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாட்டின் பணிகள் தமிழருக்கே...

* வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழியை அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற வங்கி பணியாளர் தேர்வு கழகத்தின் நடைமுறையை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டியும், தமிழ்நாட்டில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரெயில்வே, தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தபால் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பணிகளை, தமிழருக்கே வழங்க வேண்டும் என மத்திய அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

கவர்னருக்கு கண்டனம்

* சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும் சட்ட விரோத பழிவாங்கும் போக்கை கையாண்டு அரசியல் லாபம் அடைய துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் கோழைத்தனமான போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

* தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானங்களை முடக்கி வைப்பது, `தமிழ்நாடு' என அண்ணா வைத்த பெயரை மாற்ற முனைவது, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பொது வெளியில் சமூகநீதிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிப்பது என அரசியல்வாதியாக செயல்படத் துடிக்கும் கவர்னருக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு

* மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு மாற்றாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள 'இந்தியா' (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி) கூட்டணிக்கும், ஜனநாயகம் காக்க களமாடி வரும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, கூட்டணியின் வெற்றிக்கு உழைக்க உறுதியேற்கிறது.

* 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை முழுமையாக அப்புறப்படுத்த, முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில், இந்தியா முழுமைக்குமான நம்பிக்கை முகமாக உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற் தேர்தல் பணிகளில் இளைஞர் அணியினர் முழு மூச்சாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

* இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்களை பங்கேற்கச் செய்வது என உறுதியேற்போம் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னதாக, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்புரையாற்றினார்.


Next Story