தஞ்சை கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி


தஞ்சை கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். இதனால் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை அங்கு இருந்தவர்கள் பறித்தனர். அப்போது மூதாட்டி கீேழ விழுந்து காயமடைந்தார்.

தஞ்சாவூர்

தீக்குளிக்க முயற்சி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருக்கோடிகாவல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி சகுந்தலா (வயது65). இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு சென்றனர். அங்கு திடீரென சகுந்தலா தான் கொண்டு சென்ற பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஊற்ற முயன்றார்.

தலையில் காயம்

உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று சகுந்தலாவின் கையில் இருந்த பாட்டிலை பறித்தனர். அப்போது சகுந்தலா நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டரே நேரில் வந்து சகுந்தலாவிடம் விசாரணை நடத்தியதுடன் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சகுந்தலா கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக சகுந்தலா மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த விவரம் வருமாறு:-

சகுந்தலாவின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி ஜெயப்பிரகாஷ் விபத்தில் இறந்தார்.

ஒரே மகனை பறிகொடுத்த சகுந்தலா, பன்னீர்செல்வம் தம்பதியினர் வயதான காலத்தில் யாருடைய ஆதரவும் இன்றி வசித்து வந்தனர். சகுந்தலாவின் வீட்டை சிலர் ஆக்கிரமித்து அவரையும் அவரது கணவரையும் வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இது குறித்து சகுந்தலா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது ஜூலை 31-ந் தேதிக்குள் விசாரணை செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை தொடர்ந்து தங்களை விரட்டிவிட்டு வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், வீட்டில் இருந்த 16 பவுன் நகை, ரூ.54 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒப்படைக்க கேட்டும் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தபோது சகுந்தலா தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


Next Story