'பார்' நடத்த அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது


பார் நடத்த அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது
x

டாஸ்மாக் பார் நடத்த அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவள்ளூர் டாஸ்மாக் மேலாளர், உடந்தையாக இருந்த டிரைவர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தானு (வயது 49). இவர் ஏற்கனவே வேப்பம்பட்டு, காக்களூர், மற்றும் திருத்தணி சாலையில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் புதிதாக பார் தொடங்க அனுமதி கேட்டு காக்களூர் தொழிற்சாலையில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர் மற்றும் துணை கலெக்டர் கலைமன்னன் (51) என்பவரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு கலைமன்னன் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தானு, இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

கலைமன்னனை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தானுவிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறுவுறுத்தினர்.

அதன்பேரில் தானு ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சத்துடன் நேற்று மாலை காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது கலைமன்னன் அவருக்கு டிரைவராக வேலை செய்யும் சங்கர் (47) என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி தானு, டிரைவர் சங்கரிடம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் இது தொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் மற்றும் டிரைவர் சங்கர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story