எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிட வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையிலும், கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் இ.எம்.ஐ.எஸ். பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இருதயசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வத்துரை உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






