தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள்
தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிறுவனர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச் செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு விரைவில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாறுபட்ட பாடத்தில் உயர்கல்வி பயின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 194, நாள் 12.9.2018-ன்படி 6.4.2018 என்ற தேதியை நீக்கம் செய்து அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 50 சதவீதத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.