பள்ளி வராண்டாவில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள்
பொள்ளாச்சியில் பிளஸ்-2 விடைத்தாள்களை பள்ளி வராண்டாவில் அமர்ந்து ஆசிரியர்கள் திருத்தினர். அங்கு போதிய வசதிகளை கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பிளஸ்-2 விடைத்தாள்களை பள்ளி வராண்டாவில் அமர்ந்து ஆசிரியர்கள் திருத்தினர். அங்கு போதிய வசதிகளை கல்வி அதிகாரிகள் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையில் கடந்த 11-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. முதல் நாள் ஆசிரியர்கள் போதிய இடவசதி இல்லை என்று குற்றம் சாட்டியதோடு கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக 70 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் அவதி
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் மையம் செயல்பட்டு வரும் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக விடைத்தாள் திருத்துவதற்கு போதிய அறைகள் ஒதுக்கவில்லை. இதனால் பள்ளி வராண்டாவில் அமர்ந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
இடப்பற்றாக்குறை காரணமாக பள்ளி வராண்டாவில் அமர்ந்து ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விடைத்தாள்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இடவசதி இல்லாததால் பாதி பாடங்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம். இதற்கு முன் இரு மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கடும் சிரமப்பட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.