பணப்பலன்கள் வழங்கக்கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


பணப்பலன்கள் வழங்கக்கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x

பணப்பலன்கள் வழங்கக்கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஐகோர்ட்டு முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்க வேண்டுமென்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர்களுக்கு பணப்பலன்களை வழங்க உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், வெவ்வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்குகள் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, 1993-ம் ஆண்டு அரசாணையை அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் 2017 மார்ச் மாதத்திலிருந்து அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு பணப்பலன்கள் கோரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர் ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பரேஷ் உபாத்யாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த விசாரணையின்போது, 2016-ம் ஆண்டுக்கு பிறகு புதிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என முழு அமர்வு உத்தரவிட்டதால் நிவாரணம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை என அரசுத்தரப்பில், தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2013-ம் ஆண்டே அவர் வழக்கு தொடர்ந்திருக்கிற காரணத்தினால் அவருக்கு இந்த உரிமையிருக்கிறது. அவருக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக அரசின் கருத்துக்களைக் கேட்டு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு அரசுத்தரப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக்கூறிய நீதிபதிகள், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story