அபுதாபியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது - போலீசாரிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்


அபுதாபியில் இருந்து சென்னை வந்தபோது நடுவானில் விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது - போலீசாரிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்
x

அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் சிக்கியதும் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்.

சென்னை

மீனம்பாக்கம்,

அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் சிக்கியதும் கதறி அழுது மன்னிப்பு கேட்டார்.

பெண் பயணியிடம் சில்மிஷம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அபுதாபியில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் 156 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் திடீரென கூச்சலிட்டு சத்தம் போட்டார். உடனே சக பயணிகளும், விமான பணிப்பெண்களும் கூச்சலிட்ட பெண் பயணியிடம் என்ன நடந்தது? என்று கேட்டனர்.

அப்போது தனது இருக்கைக்கு பின்னால் அமர்ந்துள்ள வாலிபர், இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு தன்னிடம் சில்மிஷம் செய்ததாக பதற்றத்துடன் கூறினார்.

அந்த வாலிபரை விமான பணிப்பெண்களும், சக பயணிகளும் கண்டித்தனர். அந்த வாலிபர், "தூக்கத்தில் தவறுதலாக கை பட்டு விட்டதாக" கூறினார். உடனே பெண் பயணி, "ஏற்கனவே அவருடைய கைகளை தட்டி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து அவர் சில்மிஷம் செய்ததாக" கூறினார்.

போலீசில் ஒப்படைப்பு

இதுபற்றி விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமான கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியதும், தயாராக நின்ற விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பெண் பயணிக்கு விமானத்துக்குள் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்தனர்.

அவரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சுங்க மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்ததும் விசாரித்தனர். பின்னர் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.

கதறி அழுதார்

அப்போது அந்த வாலிபர், "தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று போலீசாரிடம் கதறி அழுதார். மேலும் அந்த பெண் பயணியிடமும், மன்னிப்பு கேட்டார். "நான் வீட்டு வேலை செய்து விட்டு விடுமுறையில் சொந்த ஊர் வருகிறேன். நீங்கள் புகார் செய்தால் என் வேலை போய்விடும்" என்று கூறி அழுதார்.

இதுபற்றி பெண் பயணி கொடுத்த புகாரின்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சக்தி (வயது 28) என்பதும், சவுதி அரேபியாவில் கூலி வேலை செய்து விட்டு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியதும் தெரிய வந்தது.

இதையடுத்து நடுவானில் விமானத்துக்குள் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை தந்ததாக சக்தியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story