சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்


சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

வாலிபர் பலி

சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி அருகே செல்லும்போது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது பயங்கரமாக மோதி அருகில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் மீது மோதியது. இதில் சாலையை கடப்பதற்காக நின்ற வாலிபர் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி விவரம் தெரியவில்லை?. மோட்டார் சைக்களில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

சாலைமறியல்

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் திருத்தேரி பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதை கண்டித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story