பற்களை பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தின் கேமரா பதிவுகளை வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பற்களை பிடுங்கிய விவகாரம்: போலீஸ் நிலையத்தின் கேமரா பதிவுகளை வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சி.சி.டி.வி. காட்சிகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மதுரை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, என்னை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கினர். அப்போது என்னுடைய 4 பற்கள் பிடுங்கப்பட்டன. என்னைப்போல மேலும் சிலரின் பற்களை பிடுங்கி, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சித்ரவதை செய்தார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சி.சி.டி.வி. காட்சிகளை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சார்பில் ஆஜரான அரசு வக்கீல், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ்நிலையங்களிலும் 213 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பதிவாகும் காட்சிகள் மென்பொருள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்கிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், போலீஸ் நிலையத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை மனுதாரருக்கு வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி, அம்பாசமுத்திரம் போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story