பற்களை பிடுங்கிய விவகாரம்: மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு..!


பற்களை பிடுங்கிய விவகாரம்: மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு..!
x

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி, அம்பை கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் 17 வயது சிறுவனுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்த விசாரணைக்கு ஆஜராக 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் தவிர, மேலும் 2 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்பிரிவு காவலராக இருந்த போகன், உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஏஎஸ்பி பெயர் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக இருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Next Story