"அன்று விமானத்தில் நடந்தது இதுதான்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி


அன்று விமானத்தில் நடந்தது இதுதான் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
x

சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது.

சென்னை,

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன். கூட்டணி கட்சியினரிடம் பேசிய பிறகு அதுகுறித்து பாஜக மேலிடத்துக்கு தெரிவிப்பேன். அதன் பின்னர்தான் முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுதைவிட கட்சியின் வளர்ச்சிதான் எனக்கு கொடுக்கப்பட்ட பணி. பாஜகவுக்கு கூட்டணி தர்மம் உள்ளது. நியாயம் உள்ளது. ஆகவே இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சியுடன் பேசி, அந்த தகவல் பாஜக மேலிடத்துக்கு அனுப்பி பின்னர் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து விமான கதவு திறக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறிய ரக விமான சென்றது. அதில் இளைஞர் அணி தேஜஸ்வி சூர்யா மற்றும் நானும் இருந்தோம். விமானத்தில் அவசர வழி கதவை தேஜஸ்வி திறக்கவில்லை. அவர் தனது கையை அந்தக் கதவின் மேல் வைத்திருந்தார். அந்தக் கதவு சரியாக மூடாமல் இருந்ததால் அதை விமானப் பணிப்பெண்களின் கவனத்திற்குத் தான் தேஜஸ்வி கொண்டுவந்தார். அதன்பின்னர் தான் விமானப் பணிப்பெண்கள் அதைப் பார்த்தனர். இது அவரது கடமை. அவர் எவ்வகையிலும் அந்தக் கதவைத் திறக்கவில்லை. இதுகுறித்து தேஜஸ்வி சூர்யாவிடம் எப்படி நடந்தது குறித்து தான் எழுதி தருமாறு கேட்டனர். தவறுதலாக அது திறந்திருந்தது. யாரும் வேண்டும் என்றே அவசர கால வழியை திறக்க மாட்டார்கள். அந்த அவசரகால கதவில் சிறிய தவறு இருப்பது போல் உணர்ந்ததால் உடனடியாக விமான ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது" என்று அண்ணாமலை கூறினார்.


Next Story