தர்மபுரி குமாரசாமிபேட்டைதுர்க்கையம்மன் கோவில் தேரோட்டம்திரளான பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர்
தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு துர்க்கையம்மன் கோவிலில் 32-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடு மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது இதை தொடர்ந்து 7 நாட்கள் தினமும் காலை, மாலை, இரவு 3 நேரங்களில் அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் பூர்த்தி ஹோமம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பெண்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு துர்க்கையம்மன் கோவில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துர்க்கையம்மன் விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்.