கந்தம்பாளையம் அருகே குன்றின் மீது அமைந்துள்ள வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


கந்தம்பாளையம் அருகே குன்றின் மீது அமைந்துள்ள  வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா?  பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:45 PM GMT)
நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே குன்னமலையில் மலை குன்றின் மீது அமைந்துள்ள பழமைவாய்ந்த வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பில் அப்பகுதி பக்தர்கள் உள்ளனர்.

வல்லீஸ்வரர் கோவில்

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ளது குன்னமலை கிராமம். இங்குள்ள சிறிய மலைகுன்றின் மீது பழமைவாய்ந்த வல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும்.

இந்த கோவில் முழுவதும் பெரிய, பெரிய கற்களை கொண்டு கலைநயம் மிக்க சிற்பக்கலையுடன் எழில்மிகு தோற்றத்துடன் வடக்கு, தெற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் சிவன், அம்பாள், முருகன் சன்னதிகள் தனித்தனியாக மூன்று பகுதிகளாக காணப்படுகிறது. இந்த சன்னதியில் கற்களால் ஆன சுற்றுச்சுவர்களில் கலை வேலைப்பாடுகள் மிக்க மணி ஆரங்கள், மீன் போன்ற எண்ணற்ற சிற்பங்கள் அடங்கிய தூண்கள் நிறுவப்பட்டு உள்ளன. இதன்மூலம் குன்னமலை முற்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்மணி கற்கள் வாணிபத்தில் சிறந்து விளங்கியது தெரியவருகிறது.

13-ம் நூற்றாண்டு கல்வெட்டு

மேலும் இந்த கோவிலில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகளில் கொல்லிமலை நாட்டு வல்லீஸ்வரர் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. பாறைகள் சிதிலமடைந்து இருப்பதால் மற்ற தகவல்கள் தெளிவில்லாமல் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் காணப்படுகின்றன. எனவே சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது என்பது மட்டும் தெளிவாகிறது.

கொங்கு நாட்டின் சிறப்புகளை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக் கூறும் வகையில் கலை பொக்கிஷமாக விளங்கும் இந்த கோவில் தற்பொழுது சிதிலமடைந்து காணப்படுகிறது. பாதுகாப்பற்ற நிலையில் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் நிறைந்தும் கோபுரங்கள் சிதிலமடைந்தும் இருக்கின்றன. எனவே தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து இந்த கோவிலை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

முற்றிலும் சேதமடைந்த கோபுரம்

இதுகுறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிற்பி சக்திவேல் கூறியதாவது:-

இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இங்குள்ள சிவன் சன்னதியில் லிங்கம் உடைக்கப்பட்டு கவனிப்பார் இன்றி இருண்ட குகையாக காட்சியளிக்கிறது. தற்போது சிவலிங்கத்தின் அடிப்பகுதி மட்டும் உள்ளது அதன் மீது தற்காலிகமாக ஒரு கல் எடுத்து நிறுவப்பட்டு உள்ளது மேலும் அம்பாள், முருகன் சன்னதியில் சிலைகள் இன்றி வெற்றிடமாக காணப்படுகிறது. இந்த கோவிலின் கோபுரம் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டதாகும். இந்த கோபுரம் தற்போது முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.

மேலும் விநாயகர் சன்னதி அமைப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடம் முழுவதுமாக கட்டப்படாமல் அறையும், குறையுமாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த கோவிலை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள சிற்பங்களை பாதுகாக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

புதுப்பிக்க வேண்டும்

குன்னமலையை சேர்ந்த விவசாயி குணசேகரன்:-

தற்போது இந்த கோவில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் சென்று வழிபடுவதில்லை. முற்காலத்தில் இந்த கோவிலில் தினசரி அன்னதானத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்று வந்ததாக முன்னோர்கள் கூறுவார்கள். கலை பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய கோவில் தற்போது சிதிலமடைந்து காணப்படுவது வேதனை அளிக்கிறது.

இந்த கலை பொக்கிஷம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் கோபுரத்தை சுற்றி உள்ள கலைநயம் மிக்க கற்களை மட்டும் உடையாமல் எடுத்து சிறிய கோபுரமாக கட்ட வேண்டும். மேலும் அனைத்து சன்னதிகளையும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story