கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில்தைப்பூசத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்ககொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கபிலர்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் குதிரை வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மகர லக்னத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு சத்தாபரணமும், 7-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடும், 8-ந் தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு ஆட்டு கிடா வாகனத்தில் சாமி புறப்பாடும், 9-ந் தேதி காலை சாமி மலைக்கு எழுந்தருளளும், இரவு விடையாற்றி உற்சவம் மற்றும் சர்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் திருத்தேர் திருவிழா ஆலோசனைக் குழு தலைவர் ராமலிங்கம், விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.