ராம நவமியையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ராமநவமி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநவமி விழா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி எஸ்.வி, ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெள்ளிகவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வே.முத்தம்பட்டி
தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
----