காட்டுக்குள் உள்ள கோவில் திருவிழா: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு


காட்டுக்குள் உள்ள கோவில் திருவிழா: கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் ஆதிகருவண்ணராயர் பொம்மாதேவி கோவில் அமைந்துள்ளது.

சென்னை,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் ஆதிகருவண்ணராயர் பொம்மாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பவுர்ணமி திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில், கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "திருவிழாவின்போது ஏராளமான வாகனங்கள் வனப்பகுதிக்குள் வருகிறது. விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை விட்டுவிட்டு செல்கின்றனர். பட்டாசுகளை வெடிக்கின்றனர். இதனால் மாசும், வனவிலங்குகளுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது'' என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், கோவிலுக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதிப்பது இல்லை. விலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக், மதுபானங்கள் கொண்டு வரக்கூடாது. பட்டாசுகள் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவின் போது அரசு கட்டுப்பாடுகளை முழுமையாகவும், தீவிரமாகவும் அமல்படுத்த வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற மார்ச் 15-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.


Next Story