2-வது நாளாக தற்காலிக நர்சுகள் காத்திருப்பு போராட்டம்


2-வது நாளாக தற்காலிக நர்சுகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2023 7:30 PM GMT (Updated: 2 Jan 2023 7:30 PM GMT)

சேலத்தில் பணி நீட்டிப்பு வழங்கக்கோரி நேற்று 2-வது நாளாக தற்காலிக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலத்தில் பணி நீட்டிப்பு வழங்கக்கோரி நேற்று 2-வது நாளாக தற்காலிக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக நர்சுகள்

தமிழகத்தில் 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் தற்காலிக அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணி செய்ய சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் பணிக்காலம் முடிந்து விட்டது என்றும், அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் சுகாதாரத்துறை அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

அப்போது, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் இரவு வரை போராட்டம் நீடித்ததால் 105 நர்சுகளை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் குகை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். அதன்பிறகு அனைவரும் வீடுகளுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் திருமண மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, நேற்று 2-வது நாளாக கைதான நர்சுகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க பா.ம.க. வலியுறுத்தும் என்றும் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நர்சுகளை போலீசார் விடுவித்தனர். ஆனால் நர்சுகள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் பணி நீட்டிப்பு வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவத்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தற்காலிக நர்சுகளின் காத்திருப்பு போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story