டெண்டர் முறைகேடு வழக்கு: நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு


டெண்டர் முறைகேடு வழக்கு: நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
x

எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வேலுமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நிறுவனங்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுதாக்கல் செய்தன.

நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர், அவருக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. எனவே தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தமிழக அரசு சார்பில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை 6 வாரங்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story