தென்னரசு தான் அதிமுக வேட்பாளர்;இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்- அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்


தென்னரசு தான் அதிமுக வேட்பாளர்;இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும்- அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்
x

இபிஎஸ் - ஓபிஎஸ் இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறி உள்ளார்.

சென்னை:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவை கூட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்திற்கு மட்டும் இது பொருந்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவில் இறுதி செய்யும் என்றும் வேட்பாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை அவை தலைவர் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும் என்றும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் திங்களன்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்படும் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறி உள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசை ஏற்கிறேன் என்ற வகையில் வேட்பாளர் ஒப்புதல் படிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதிமுக வேட்பாளராக தென்னரசை முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பும் பணிகள் தொடங்கியது. இந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைக்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் கையெழுத்திட்டு நாளை இரவு 7 மணிக்குள் அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். தென்னரசை வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம், அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு என்று தமிழ்மகன் உசேன் உறுதி செய்துள்ளார்.


Next Story