சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x

சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சதானந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சாலையோரமாக உள்ள பவானி முத்து மாரியம்மன் கோவிலை அகற்றுவதற்கு அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் தாசில்தார் ஆறுமுகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் இந்த கோவிலை இடிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு தாசில்தார் கோர்ட்டு உத்தரவுபடி சாலை விரிவாக்க பணிக்காக இந்த கோவில் இடிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் கோவிலில் உள்ள சிலைகளை எடுத்து கோவில் பின்புறமுள்ள பகுதியில் ஒரு கொட்டகை அமைத்து அதில் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று தாசில்தார் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட காரணத்தால் கோவிலை அகற்றும் பணி நேற்று ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது.

இது குறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறுகையில்:-

கோவிலில் உள்ள சிலைகளை அவர்களாகவே அகற்றுவதற்கு ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிலை அகற்றுவதற்காக அந்த பகுதியில் கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் சிங்காரவேலு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story