அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ; 4 பஸ்கள் எரிந்து சேதம்


அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ; 4 பஸ்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

பண்ருட்டியில் நள்ளிரவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 பஸ்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

பண்ருட்டி

50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு பண்ருட்டியில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதன் அருகே உபயோகமற்ற பழைய பஸ்கள் ஏலம் விடுவதற்காக தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்றுமுன்தினம் காலை இந்த பஸ்களில் இருந்து தேவையான சில உபகரணங்களை வெல்டிங் மூலம் வெட்டி எடுக்கும் பணியில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். பணி முடிந்த பின்னர் மாலையில் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

தீப்பிடித்து எரிந்தன

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட உபயோகமற்ற பழைய பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது தீ மளமளவென அருகில் நின்ற பஸ்களுக்கும் பரவியது. இதனால் 4 பஸ்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

ரூ.5 லட்சம் சேதம்

இருப்பினும் இந்த தீ விபத்தில் ஒரு பழைய பஸ் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. மேலும் 3 உபயோகமற்ற பஸ்களின் முன்பகுதி மட்டும் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து பற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் கடலூர் மண்டல பொதுமேலாளர் ராஜா, கிளை மேலாளர் தேவநாதன், துணை மேலாளர் சிவராமன் ஆகியோர் விரைந்து வந்து எரிந்து சேதம் அடைந்த பஸ்களை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர்.

போலீசார் விசாரணை

அதேபோல் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பஸ்சில் இருந்த உபகரணங்களை ஊழியர்கள் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றும் பணியின்போது அதிலிருந்து பறந்த தீப்பொறியானது, பஸ்களின் அருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பழைய இருக்கை கழிவுகளில் பட்டு புகைந்து அதன் மூலம் இந்த தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் 4 பழைய பஸ்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story