தாம்பரம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை


தாம்பரம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்: பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை
x

தாம்பரம் அருகே பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி தலைவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகத்தை சிதைத்து புதரில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற பெரி வெங்கடேசன் (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் 2015-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்தார். மேலும் பாரதீய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் வெங்கடேசனை கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் அவரது முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு வெட்டி சிதைத்துள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் அவரது உடலை இழுத்து சென்று அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

புதருக்குள் அரிவாளால் வெட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கிடப்பதை கண்டு பொதுமக்கள் பீர்க்கன்காரனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கும்பல் ஒன்று அவரை காரில் கடத்தி வந்து காலி மைதானத்தில் வைத்து அவரை கொலை செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததன் மூலம் தெரியவந்தது.

வெங்கடேசன் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ஆண்டில் ஒருவரை கொலை செய்த வழக்கில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெங்கடேசனுக்கும் அவருடன் முதலில் நண்பர்களாக இருந்தவர்களுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.

கொலை செய்யப்பட்டவர் பா.ஜ.க. பட்டியல் அணி மண்டல தலைவர் என்பதால், பா.ஜ.க. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேதசுப்ரமணியம் தலைமையில் ஏராளமான பா.ஜ.க.வினர் தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாம்பரம் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றனர்.

அப்போது தாம்பரம் துணை போலீஸ் கமிஷனர் பவன் குமார் ரெட்டி, கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாக அவர்களிடம் கூறியதன் பேரில், மனு அளிக்காமல் அவர்கள் திரும்பி சென்றனர்.

தப்பிச்சென்ற காரை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story