திருப்பத்தூரில் பயங்கரம்: 'மது பார்' மோதலால் வாலிபர் படுகொலை- 4 பேர் கைது
மது பார் மோதலால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
மது பார் மோதலால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது பாரில் மோதல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்செவல்பட்டியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவருடைய மகன் விவேக் என்ற விக்கி (வயது 25). இவர் திருப்பத்தூரில் தாயார் மஞ்சுளாவுடன்(49) வசித்து வந்தார். மீன்கடை நடத்தி வந்ததுடன், பகுதி நேர டிரைவராகவும் இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூரில் சிவகங்கை ரோட்டில் உள்ள ஒரு தனியார் மது பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த முகமது அபுதாகீர் (35) என்பவருக்கும் விவேக் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வாலிபர் குத்திக்கொலை
அதன் பின்னர் அன்று இரவே முகமதுஅபுதாகீர் அவரது நண்பர்களுடன் விவேக் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் அருகே உள்ள ரணசிங்கபுரம் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, விவேக்கின் நண்பர்களை அங்கு அழைத்துள்ளனர். அப்போது அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டு முகமது அபுதாகீர் தரப்பினர் விவேக் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.
படுகாயம் அடைந்த விவேக் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே விவேக் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இஸ்பெக்டர்கள் விஜயன், கலைவாணி, அந்தோணிசெல்லத்துரை ஆகியோர் தலைமையில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடினர்.
4 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக திருப்பத்தூர் பெரியார்நகரை சேர்ந்த முகமதுஅபுதாகீர் (35), புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (23), தென்மாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்பார்த்திபன் (29), கொழுஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.