கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
x

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் தாலி சங்கிலியை பறித்தனர். அப்போது அந்த பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

கரூர்

தாலி சங்கிலி பறிப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது மனைவி லதாவுடன் (36) சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

நாவல் நகர் அருகே சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் லதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

தீவிர சிகிச்சை

இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த லதா நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் லதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து வாங்கல் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story