அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 1:40 PM IST (Updated: 3 Oct 2023 1:50 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பேசினார்.

சேலம்,

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்து பேசியுள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிமுன் அன்சாரி கூறியதாவது:-

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ததைப் போன்று தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரி வருகிறோம். இதற்காக மத்திய சிறைச்சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து கோரிக்கையை முன்வைத்தோம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது துணிச்சலான முடிவு, அதற்கு பாராட்டுகள் என்று அவரிடம் கூறினோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசவில்லை. இது அரசியல் சந்திப்பு இல்லை. எங்களுடைய கூட்டணி குறித்து வருகிற டிசம்பரில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story