ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்


ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும்
x

பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளை கட்டப் போவதாக அறிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு விடியலைத் தருவோம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த கையாலாகாத அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக் கேடானது.

ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், பல்வேறு அணை கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எந்த ஒரு மாநிலமும், தன் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்போதைய ஆந்திர அரசு இதையெல்லாம் கடைபிடிக்காமல், தான்தோன்றி தனமாக பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.

விவசாயிகள் கவலை

தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணி மிகனிபள்ளே என்ற இடத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் அம்மாநில முதல்-மந்திரி பேசும்போது, தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக கூறியுள்ளார்.

இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். குடிப்பள்ளி என்ற இடத்திலும், சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர் தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் ஆந்திர முதல்-மந்திரி அறிவித்துள்ளார். ஆந்திர முதல்-மந்திரியின் இந்த அறிவிப்புகளால் தமிழக விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

தடுக்க வேண்டும்

ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், நீர்வளத்துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. திராவிட மாடல், திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும். கும்பகர்ண தூக்கத்தை கை விட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story