"செந்தில் பாலாஜி கைது ஜனநாயக படுகொலை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை ஒரு ஜனநாயக படுகொலை. எதிர்கட்சிகளை பழிவாங்குவதன் உச்சமாக இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இதில் எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர்.
ஒரு தனி நபரின் பகை மற்றும் கொள்கை பகை காரணமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு பா.ஜ.க. அச்சுறுத்தி வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் வலிமயை குறைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. செந்தில் பாலாஜி கைது குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதி இல்லை. ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் இல்லாததால் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை காரணமாக்கி களங்கம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.