வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

துணை தாசில்தார் தாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு வாயில் கருப்பு துணி கட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக டீக்கடையில் நின்ற நிர்வாகிகளை கைதாக போலீசார் வற்புறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

துணை தாசில்தார் மீது தாக்குதல்

திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரின் உத்தரவின் பேரில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்தை ஜப்தி செய்வதற்காக வங்கி ஊழியர்களுடன் சென்றார்.

அப்போது, அவரும், வங்கி ஊழியர்களும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 12 பேரை கே.கே.நகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் மண்டல துணை தாசில்தார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை தாக்கிய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் வாயில் கருப்பு துணி கட்டி நீதிதேவதை சிலையுடன் கலெக்டரிடம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக பா.ஜ.க.வின் திருச்சி மாநகர் மாவட்ட பட்டியல் அணி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

அதேநேரம் நேற்று காலை பா.ஜ.க. பட்டியல் அணி மாவட்ட தலைவர் யசோதன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகிக்க அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியபடி பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.

கைதாக வற்புறுத்திய போலீசார்

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் கென்னடி, செசன்சு கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் அவர்களை கைது செய்வதாக கூறி வேனில் ஏறும்படி கூறினார்கள். அதற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர், நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றால் கைது செய்யுங்கள். நாங்கள் போராட்டத்தை தொடங்கும் முன் கைதாக சொன்னால் எப்படி? என்று கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அத்துடன் அங்கிருந்து பா.ஜ.க.வினர் அனைவரும் கலைந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுவிட்டனர். ஆனால் உயர் அதிகாரிகள் கைது செய்ய கூறியிருப்பதாக கூறிய உதவிகமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர், அவர்களை வேனில் ஏறும்படி வற்புறுத்தினர். ஆனால் கடைசி வரை கைதாக மறுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story