காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமான முடிவு எடுக்க வேண்டும்; சரத்குமார் பேட்டி


காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமான முடிவு எடுக்க வேண்டும்; சரத்குமார் பேட்டி
x

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தமான முடிவு எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

திருச்சி

பேட்டி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் வந்தார். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அழுத்தமான முடிவு

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில்தான் தற்போது இருக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறும் இந்த நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் பிரச்சினையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக உள்ளது. அவர்களுக்கு அதிகம் தண்ணீர் இருக்கும்போது திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள். இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை. மத்திய அரசு இந்த விவகாரத்தில் நாம் இருப்பது ஒரே நாடு என்பதை வலியுறுத்தி, அழுத்தமான முடிவினை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும். நடிகர்கள் தான் காவிரி போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இதனை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு, மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டு நடிகர்களும் போராடுவார்கள்.

முடிவை அறிவிப்போம்

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கித்தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களது நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம். நாடாளுமன்ற தேர்தல் பண நாயகமாகத்தான் இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டமன்ற தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை. வாகனங்களுக்கான வரியை 5 சதவீதம் உயரத்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. வரி விதிப்பு விவகாரங்களில் மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story