தமிழக மக்களின் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை; எடப்பாடி பழனிசாமி


தமிழக மக்களின் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை; எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 Nov 2023 2:28 PM IST (Updated: 7 Nov 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு ரூ 2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகத்தின் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாராம். அபராதம் மிகவும் அதிகமானது, மீனவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இந்த விடியா அரசின் முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளை மீட்டு தர வேண்டியதுதானே?

ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திய மத்திய அரசின் காலில் பொம்மை முதல்வர் எதற்காக விழுந்து கெஞ்ச வேண்டும்.

உக்ரைன், காசா, மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின்,தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத்தொகையை செலுத்தும்படி அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


Next Story