துப்புரவு பணியாளர்கள் முற்றுகை-ஒப்பாரி வைத்து போராட்டம்


துப்புரவு பணியாளர்கள் முற்றுகை-ஒப்பாரி வைத்து போராட்டம்
x

துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

முற்றுகை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், தூய்மைப்படுத்தும் பணிக்காகவும் 134 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். மேலும் டெங்கு பணியாளர்கள் என 44 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த பணிகளுக்கு தற்போது புதிய ஒப்பந்ததாரர் ஏலம் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் துப்புரவு பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் என 178 பேரையும் நீக்கிவிட்டு, புதிதாக 73 பேரை பணியில் அமர்த்தப்போவதாக தெரியவந்ததையடுத்து, ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்கள் புதிய ஒப்பந்தத்திலும் தங்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று தற்காலிக துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டம்...

இது குறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், சுமார் 76 மாதங்களாக எங்களுக்கு நிலுகை தொகை மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி வர வேண்டியுள்ளது. இந்நிலையில் எங்களை பணி நீக்கம் செய்து புதிய துப்புரவு பணியாளர்களை பணி நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி தலைவரிடம் முறையிட்டோம். உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோர் துப்புரவு பணியாளர்களுக்கான துணை ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே எங்களை புதிய ஒப்பந்தத்திலும் பணியமர்த்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோம், என்று தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, புதிய ஒப்பந்த பணியாளர்கள் குறித்து இதுவரை நகராட்சி அலுவலகம் மூலம் உத்தரவிடவில்லை. யாரோ தவறாக சொன்ன தகவலை கேட்டு பணியாளர்கள் இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வருத்தம் அளிக்கிறது, என்றார்.

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வருகிற 3 மாதங்களுக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்யமாட்டோம். இருக்கிற ஆட்களே தொடர்வார்கள் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story