காஞ்சிபுரம்: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்


காஞ்சிபுரம்: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர்
x

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டத்தினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு இணை மானிய திட்டம் குறித்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பிறகு அவர் இணை மானிய திட்ட தொடர்பான வழிகாட்டி நெறிமுறை கையேட்டினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:

தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதி சேவைக்கு வழிவகுத்தல் மற்றும் நிலையான வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 101 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் குழு தொழில்களுக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் அதிகபட்சமாக 40 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் தொழில் புரிய ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் வாழிவாதார சேவை மையம் மூலம் தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்குதல், தொழில் திட்டம் மற்றும் முன்மொழிவு தயார் செய்திட உதவி செய்தல், தொழில் துவங்க தேவையான பதிவு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று தருதல், மற்றும் மின்னணு பணபரிவர்தனைகள் போன்ற சேவைகள் வழங்கி இணை மானிய திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணைமானிய திட்டத்தினை ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் வழங்கி ஊரக பகுதிகளில் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story