கீழக்கரையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட கலெக்டர்


கீழக்கரையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

கீழக்கரையில் பொதுமக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை நகராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கீழக்கரையில் அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை நகராட்சி நகர்மன்றத்திற்கு வரவழைத்து குறைகளை கேட்டறிந்தார்.முதல் கட்டமாக கீழக்கரை கடற்கரையில் கலக்கும் கழிவுநீர், பழுதடைந்த ஜெட்டி பாலம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் பொதுமக்கள் கூறியதாவது:- கீழக்கரையில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் தினமும் கடலில் கலப்பதால் கடல் மாசு அடைந்து கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலை இருந்து வருவதாகவும், அதனை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிக்கும் எந்திரங்கள் அமைக்க வேண்டும். பழுதடைந்த ஜெட்டி பாலத்தை சீரமைத்து தர வேண்டும். கீழக்கரை பகுதியில் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து வெளியூர் பஸ்களும் வந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். அதனை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

அப்போது கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் நகராட்சி கமிஷனர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், கவுன்சிலர்கள் நசீருதீன், மீரான் அலி, ஹாஜா சுஹைபு, முஹம்மது பாதுஷா, நவாஸ், நகராட்சி ஊழியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் மகாலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பாசித் இலியாஸ், நுகர்வோர் சங்க செயலாளர் செய்யது இபுராகிம், கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி துணை தலைவர் சாகுல் ஹமீது மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story