இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 நாள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3-ம் நாளான நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னவாசல் பஸ் நிலையம் அருகே மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மீராமைதீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அன்னவாசல் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகையிட்ட பெண்கள் உள்பட 84 பேரை அன்னவாசல் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசினை கண்டித்து மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏனாதி ஏ.எல்.ராசு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 46 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விராலிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையா தலைமையில், தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திருமயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம் தலைமையில் ஊர்வலமாக வந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story