தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்


தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Aug 2023 8:30 PM GMT (Updated: 26 Aug 2023 8:30 PM GMT)

பந்தலூர் அருகே தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, விரைந்து முடிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே தொகுப்பு வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, விரைந்து முடிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பழுதடைந்த வீடுகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பழையூர் ஆதிவாசி காலனியில் 10-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிசை வீடுகள், பழுதடைந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். இதனால் பருவமழை காலங்களில் வீடுகளில் மழைநீர் ஒழுகியது. இதன் காரணமாக ஆதிவாசி மக்கள் வீடுகளுக்குள் இருந்தும், நனையும் நிலை ஏற்பட்டது. மேலும் ஒரே வீட்டில் 2, 3 குடும்பத்தினர் வசித்தனர்.

இதனால் தங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பழையூர் காலனியில் புதிதாக 5 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்தது.

பாதியில் நிறுத்தம்

இதில் 2 வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில், ஆதிவாசி மக்கள் குடியேறி விட்டனர். மேலும் 3 தொகுப்பு வீடுகளில் தரைத்தளம், சுவர் மட்டும் கட்டப்பட்டு உள்ளது. இதுவரை மேற்கூரை அமைக்கப்பட வில்லை. அந்த வீடுகளில் பணி முழுமை பெறாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் பழுதடைந்த வீடுகளில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, பாதியில் நிற்கும் தொகுப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீடுகள் இல்லாத ஆதிவாசிமக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றனர்.


Next Story