சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

சுகாதாரத்துறை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக அவர்கள் வரும் 3-ஆம் நாள் மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சுகாதாரத்துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்; பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ஏப்ரல் 3-ஆம் நாள் உண்ணாநிலை போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை!

விடுபட்டு போன 1002 முதல்நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; 2715 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழக நலன் கருதி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும்!

தமிழ்நாட்டில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதிலும், நோய்த்தடுப்பு குறித்த ஆராய்ச்சிகளிலும் சுகாதார ஆய்வாளர்களின் பணி மிகவும் முதன்மையானது. புதிய நோய்கள் உருவாகி வரும் நிலையில் சுகாதார ஆய்வாளர்களின் பணிக்கு தமிழ்நாடு அரசு உரிய மரியாதை வழங்க வேண்டும்!

சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக அவர்கள் வரும் 3-ஆம் நாள் மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


Next Story