தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.
முதுகுளத்தூர்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.
பாத யாத்திரை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கினார். இதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தில் அண்ணாலை, தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் 168 நாள் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தில் அவர் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 3-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்கத்தேவர், சுந்தரலிங்கனார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் கூட்டத்தினரிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டமே சாட்சி
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கே கூடி இருக்கும் கூட்டத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பா.ஜ.க. 3-ம் முறையாக வெற்றி பெற்று, பிரதமராக மோடி பதவியேற்பார் என்பதற்கு இங்கு கூடியிருக்கும் கூட்டமே சாட்சி. என் மண் என் மக்கள் யாத்திரையின் நோக்கம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். இத்தனை ஆண்டு கால இந்திய அரசியலில் நல்லது நடந்துள்ளது என்றால், அது கடந்த 9 ஆண்டுகளில் மட்டும்தான்.
மோடி பிரதமராக வந்த பின்பு தான், அரசு ஏழைகளுக்காக செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூர் போன்ற வறட்சியான பகுதிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
இங்கே வரும் வழியில் ஏராளமான பெண்கள் தள்ளுவண்டிகளில் குடங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணித்து தண்ணீர் பிடித்துக் கொண்டு மீண்டும் தங்களது இருப்பிடம் வந்து சேர்ந்ததை பார்த்தேன்.
முன்னேற்றம் இல்லை
ஒருபுறம், மக்களுக்கு வீடு தேடி குடிநீர் வரவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டத்தை ஏற்படுத்தி, அதை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறார். மறுபுறம், அதை தடுக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள்.
கடந்த 70 ஆண்டு காலமாக தமிழக அரசியல் நிலவரத்தை நீங்கள் எல்லாம் தெரிந்திருப்பீர்கள். குறிப்பாக தி.மு.க. ஆட்சியை உன்னிப்பாக கவனித்திருப்பீர்கள். அவர்களின் ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏதாவது ஒரு நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்குமா? என்றால் கிடையாது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் இந்த மாவட்டத்தை தொடர்ந்து வறட்சியான மாவட்டமாகவே வைத்திருக்கிறார்கள். இதை வளமான மாவட்டமாக மாற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தில் எந்த முன்னேற்றத்தையும் நான் பார்க்க முடியவில்லை.
ஆட்சி மாற்றம்
இதனால் பா.ஜனதா தொண்டர்களான நாங்கள் பாதயாத்திரையாக வந்து உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். அதாவது வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மோடியை வெற்றி பெறச் செய்து மீண்டும் பிரதமராக இந்த நல்ல ஆட்சியை தொடர செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் என் முன்பாக தாய்மார்கள், முதியவர்கள், பெண்கள் நின்று கொண்டிருக்கறீர்கள். நீங்கள் உள்பட பொதுமக்கள் மனதில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பிரதிபலிக்கிறது. ஒரே ஒரு குடும்பம் இரும்பு சிறையை போல தமிழகத்தை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சியாளராக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
குடும்ப அரசியலால் வளர முடியாது
ஒரு குழந்தை படித்து, வளர்ந்து ஒரு நல்ல பதவிக்கு வர வேண்டும் என்றால் ஒரே குடும்பம் ஆட்சி செய்தால், அது சாத்தியம் ஆகாது. குடும்ப அரசியல் என்பது பொதுமக்களின் வளர்ச்சியை அடியோடு நாசப்படுத்தி விடும். கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் 3½ லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் என்று சொன்னார்கள். தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். தற்போது தி.மு.க. ஆட்சி அமைத்து 28 மாதங்கள் ஆகின்றன.
இந்த நாட்களில் எத்தனை இளைஞர்களுக்கு நீங்கள் அரசு வேலை வழங்கி உள்ளீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். குரூப்-4 தேர்வை நடத்திவிட்டு அதன் மூலம் 1,400 பேருக்கு கூட கடந்த ஓராண்டில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று மோடி அவர்கள் தெரிவித்தார். அதுபோல தற்போது வரை 5½ லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 4½ லட்சம் பேருக்கும் வரும் டிசம்பருக்குள் வேலை வழங்கப்படும்.
மாற்றம் அவசியம்
ஒரு பக்கம் மத்தியில் நடக்கும் நல்லாட்சி. உங்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆட்சி. இங்கிருக்கும் ஆட்சி உங்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் ஆட்சி. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒரு குடிநீர் குழாய் இணைப்புக்கு முதுகுளத்தூரில் 6 ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். ஆனால் அந்த இணைப்பு முழுவதும் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. முதுகுளத்தூர்காரர்கள் மிகவும் ரோஷக்காரர்கள். அப்படிப்பட்ட இந்த ஊரை எத்தனை நாளைக்கு தான் வளர்ச்சி இன்றி வைத்திருக்க முடியும்.
இந்த நிலை அடியோடு ஒழிவதற்கு அரசியல் மாற்றம் அவசியம். மோடியின் மீதான அன்பின் காரணமாக நீங்கள் எல்லாம் அவர் ராமநாதபுரம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று நம்பிக்கை வைத்துள்ளீர்கள். மோடி இங்கு போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றாலாவது இந்த தொகுதிக்கு நன்மை கிடைக்குமா? என்ற ஆவல் தான் அது. கண்டிப்பாக அவரோ, அவர் சார்பில் ஒரு எம்.பி.யையோ நாம் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு வருகிற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்பு
நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் பா.ஜ.க. கொடுமலுர் சரவணன், கபிலன், குமரகுரு, கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், வக்கீல் முதுவை இளையராஜா, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் மனோகரன், தொக்கம் செல்வகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், முன்னாள் மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, மாநில பொதுச் செயலாளர்கள் பாலகணபதி, கருப்பு முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன், மாநில விவசாய அணி நிர்வாகி சத்தியமூர்த்தி, மாநில மகளிர் அணி துணை தலைவி கலா ராணி, சிக்கல் ஸ்டாலின், சாயல்குடி ராஜசேகரன், பூபதி ராஜா, முன்னாள் ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, ராணுவ பிரிவை சேர்ந்த ரமேஷ், செந்தூரன், கீரனூர் விஜயன், மேல மானாங்கரை ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து சாயல்குடி, செல்வநாயகபுரம் ஆகிய இடங்களிலும் பொதுமக்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் மாலை பரமக்குடி சென்றார்.